Sunday, 23 March 2014

ம்க்க்கும் - குக்கூ




"கண்ணு இருக்கிறவன் எல்லா எடத்துலயும் இருக்கான் ஆனா மனசு இருக்கிறவன் எல்லா எடத்துலயும் இருக்க மாட்டான்டி"

"மொபைல் ஃபோன் இல்லாத காலத்தில் காதலித்தவர்களெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்"

'பொண்ணுங்கள திட்றதையே ஃபேஷனா வெச்சுக்கிட்டு அலையறானுங்க"

இன்னும் இதுபோன்று சில ஒன் லைனர்களை சுட்டிக்காட்டி இப்படத்தைப் பற்றி அமர்க்களமான விமர்சனத்தை வரும் வார பத்திரிக்கைகளில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இது நம்ம ஏரியா J

பார்த்துக் கொண்டிருப்பது சினிமா என்று தெரிந்தும் காட்சிகளோடு ஒன்றிப்போய் கண்களில் உங்களுக்கு நீர் கோர்த்திருக்கிறதா? பக்கத்திலிருப்பவர்கள் குழந்தைத்தனமாக ஏதாவது நினைத்து விடப் போகிறார்களென்று உடனே ஒரு நீண்ட பெருமூச்சு அல்லது கொட்டாவி விடுவது போல ஏதோ செய்து அந்த உணர்வை மறைத்திருக்கிறீர்களா? நான் அப்படி செய்திருக்கிறேன். சினிமாவாக இருந்தாலும் மனதைக் குடைவது போன்ற காட்சிகள் திரையில் வந்தால் என் விழிகள் பிசிபிசுக்க ஆரம்பித்து விடும். இப்படித்தான் ஒருமுறை “ஆரம்பம்” படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட அஜீத் மடியிலேயே அவர் நண்பன் உயிர் விடும் காட்சியைப் பார்த்து தாளாது தியேட்டரிலேயே கேவி கேவி அழ ஆரம்பித்து விட்டேன் உடனே என் நண்பன் ஓடிப்போய் எனக்கு ஒரு முட்டை பப்ஸ் வாங்கித் தந்து என் தலையை தடவிக் கொடுத்து என்னை ஆற்றுப்படுத்தினான்.அந்த அளவுக்கு நான் மனதளவில் பலவீனமான ஆள்.   

ஆகவே, குக்கூ படத்தின் ட்ரெய்லரை முதன்முதலில் பார்க்கும்போதே முடிவு செய்துவிட்டேன். படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக காசி, என் மன வானில், நான் கடவுள் போன்ற திரைப்படங்களை ஒருமுறை மீள்பார்வை செய்துவிட்டுத்தான் இந்த படத்தை பார்க்க செல்ல வேண்டுமென்று, முறையே அவ்வாறே செய்து ராஜ்கிரணே வந்து என் மார்பில் ஓங்கி ஒரு குத்து விட்டாலும் அசையாத கல்நெஞ்சுக்காரனாக மாறி படம் பார்க்க சென்றேன்

மாற்றுத்திறனாளிகள் பற்றிய படமென்றால் படத்தை பார்க்க அமரும் முன்பே ரெடிமேடாக 300கிராம் கருணை, பரிவு, பரிதாபம், பச்சாதாபம், இத்யாதி நம்முடைய மேல் பாக்கெட்டில் வந்து ரொம்பிவிடும். மீதி விஷயங்களை படம் பார்த்துக் கொள்ளும். மொத்த படத்தையும் பார்த்து முடித்து விட்டு எழுந்திருக்கும்போது பெரிதாய் ஒன்றும் பாதிக்கவில்லை என்றாலும் படம் சுமார்தான், காவியம், ஓவியம் என்று வாயெடுத்து சொல்ல முடியாமல் தர்ம சங்கடமாக இருக்கும். அப்படியொரு .சங்கடத்தை ஏற்படுத்திய படம்தான் குக்கூ

தமிழ்-சுதந்திரக் கொடி இவ்விருவருக்குமிடையில் மோதல், காதல், பிரச்சனை, க்ளைமாக்ஸ், என்று தமிழ்சினிமா சம்பிரதாயத்துக்கு உட்பட்டு வந்திருக்கும் சாதா படம் என்றாலும் கதை நடப்பது பார்வைத் திறன் அற்றவர்களுக்கு என்பதால் சாதா அப்படியே ஸ்பெஷல் சாதாவாக மாறுகிறது. இப்படத்தின் இயக்குநர் ராஜுமுருகன், தான் விகடனில் பத்திரிக்கையாளராக இருந்தபோது ஒரு காதலர் தின பேட்டிக்காக தமிழ் என்கிற பார்வையற்ற மனிதரைப் பற்றி கேள்விப்பட்டு  அவரை தேடிப் போய் சந்திக்க அவர் தன்னுடைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக படம் விரிகிறது.

எளிதில் அனுமானிக்கக் கூடிய கதையில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் வலுவாக, சுவாரசியமாக இல்லாமல் கொஞ்சம் பிசிறினாலும் படம் பார்ப்பவன் பக்கத்துக்கு சீட்டுக்காரனிடம் பேச அல்லது செல்போனை எடுத்து தடவ ஆரம்பித்து விடுவான். கதை நடக்கும் களமானது நாம் அன்றாடம் பார்த்துவிட்டு மாத்திரத்தில் முகத்தை திருப்பிக் கொள்பவர்களின் வாழ்க்கையின் இன்னொரு பக்கம் என்பதால் சொல்வதற்கு நிறைய ஸ்பேஸ் இருந்தும் இயக்குநர் இருவரின் காதல் வட்டதிற்க்குள்ளேயே சுழன்றதோடு நீட்டி முழக்கியிருக்கிறார் போதிலும் எப்போதாவது சொல்லப்படுகின்ற மனிதர்களின் கதை, ஃப்ரெஷ்ஷான ஒளிப்பதிவு மற்றும்  இசை அத்தோடு முன்பே சொன்ன சில உளவியல் காரணங்களால் ரசிகனால் ஓரளவு தாக்குப் பிடிக்க முடிகிறது. இங்கு தான் "குக்கூ" அனைத்து தரப்பினரிடமிருந்தும் Neutral Feedback பெற்ற படமாக மாறியிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் என்னை வெகுவாய் கவர்ந்தது "கதாபாத்திரங்கள்". இயக்குநர் தன்னுடய வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களையெல்லாம் அங்கங்கே கதைக்கு ஏற்றாற்போல் இடைச்செருகல் செய்து நடமாட விட்டிருக்கிறார் என்பது அவர் இதற்கு முன்பு எழுதிய "வட்டியும் முதலும்" என்கிற கட்டுரைத் தொடரின் மொத்த சாராம்சத்தை வைத்து தீர்மானிக்க முடிகிறது. உதாரணத்திற்கு ரயிலில் அன்றாடம் பயணிக்கும் மேல்தட்டு வர்க்கத்தினரின் மனித நேயம், பார்வையற்றவர்களுக்கு சர்வீஸ் செய்து அதில் பெருமை தேடிக் கொள்ளும் கார்ப்பரேட் கூட்டம், இப்படி பல கதாபாத்திரங்கள் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக, பணத்தை திருடிச் சென்று ஓடும் போலீஸ்காரன், ட்ரங்க் & டிரைவ் செய்து வண்டி ஓட்டுகிறவன், வேணாம்னே கேஸ்ல ஏதாவது சிக்கிடுவோம்னு உதவி செய்ய பம்மும் சாமானியன், மனசாட்சியே இல்லையாடா வாடா எனக்கூறி காப்பாற்றும் அசாதாரணன் என்று சமூகத்தின் அத்தனை முகங்களையும் ஒரே காட்சியில் கண்முன்னே நிறுத்தியிருக்கும் குக்கூ டீமிற்கு சபாஷ்!! 

தனக்கு இருக்கும் குறையை தானே கிண்டல் செய்து கொள்ளும் சுய எள்ளல் வசனங்கள் படத்தில் நிறைய இடத்தில் வந்தாலும் இந்த வகையறா காமெடி துணுக்குகளை ஏற்கனவே "காதலா காதலா, "123" போன்ற படங்களில் பிரபுதேவா செய்து விட்டதால் கதாநாயகன் மற்றும் அவனுடைய நண்பர்கள் குழாம் பேசிக் கொள்ளும் போது கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது.

அஜீத், விஜய் இருவர் மீதும் என்னைப் போன்றே ராஜு முருகனும் மரண காண்டு கொண்டிருப்பதை அவர் தன் படத்தின் மூலம்  பகுமானமாக காட்டியிருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கும் அதே சமயம் ஒரு ஒயின் ஷாப் காட்சியில் லோக்கல் அரசியல்வாதி தன் சகாக்களோடு குடித்துக் கொண்டிருக்கும்போது அவர் கட்சிக்காரன் வந்து " அண்ணேன் Election'லாம் வருது பெரியண்ணன் கிட்ட சொல்லி ஏதாவது பாத்து செய்யுங்கண்ண" என்று கேட்கிறார். அதற்க்கு அவர்  "டேய் பெரிய அண்ணனுக்கு எல்லாம் இப்போ பவரு இல்லடா எல்லாம் சின்ன அண்ணனுக்குத்தாண்டா அப்டேட்டடாக இருங்கடா" என்று சமகால தி.மு.க அரசியல் வசனத்தை வைத்து அழகிரி ஆதரவாளனான என்னை கொதித்தெழ வைத்திருக்கிறார்.

படத்தின் நீளத்தையும், ரிப்பீட்டட் காட்சிகளையும் குறைக்காமல் வலுவான திரைக்கதையையும் அமைக்காததால் குக்கூவைப் பற்றி பெரிதாய் ஒன்றும் வெளியில் பீத்திக் கொள்ள முடியாமல் "ம்க்க்கும்" என்று சொல்லத்தான் வாய் வருகிறது. அதற்காக இப்படத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடியாது. இதுபோன்ற க்ரவுண்ட் ஜீரோ படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வரவேண்டும், வணிகத்திற்காக எதையும் சமரசம் செய்துகொள்ளாமல் தன் முதல் படத்திலேயே தான் நினைத்ததை எடுக்க விரும்பும் ராஜு முருகன் போன்ற பிடிவாதக்காரர்கள் ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பார்கள்!

ஆக்கம் - தமிழ்ப் பிரபா