Wednesday, 12 February 2014

உருகுதே மருகுதே - காதல் காட்சிகள்

உருகுதே மருகுதே - காதல் காட்சிகள்

காதலில் மகா உன்னதமான ஒரு உணர்வு இருக்கிறதென்பதை நம் மக்களுக்கு முன்மொழிந்ததில் தமிழ் சினிமாவுக்கு கடலளவு பங்கு இருக்கிறது. சினிமா என்ற ஒன்று இல்லையென்றால் காதலைப் பற்றி அறிந்து கொள்ளாமல் காட்டுத்தனமான காமுகர்களாகவே இருந்திருப்பதற்கும் வாய்ப்பு அதிகம். செவ்வியல் படைப்புகளில் என்னதான் ரசம் சொட்டச் சொட்ட காதலைப் பற்றி சொல்லியிருந்தாலும் சினிமா என்கிற மகத்தான ஊடகத்தின் மூலம்தான் அதன் வீரியம் எல்லோரையும் போய் சேர்ந்தது. இன்னும் எழுநூறு வருடத்திற்கு காதலை மட்டுமே வைத்து இங்கு எத்தனை திரைப்படம் வேண்டுமென்றாலும் எடுக்கலாம்.

தமிழ் சினிமாவும், காதலும் இரண்டறக் கலந்து நமக்குள் அப்படியொரு ரஸவாதத்தை நிகழ்த்தியிருக்கிறது. என்னதான் தற்போது உலகசினிமா உள்ளங்கையில் வந்து, பிரித்து மேய்ந்தாலும் ஒருகாலத்தில் உருகி மருகி பார்த்த தமிழ் சினிமா காதல் காட்சிகள் நம் நினைவுக் குப்பைகளை சாதரணமாக கிளறக் கூடியவை. அந்த காட்சிகளோடு நம்மை பொருத்திப் பார்த்து சிரித்திருக்கிறோம், அழுதிருக்கிறோம், ஏங்கியிருக்கிறோம், சுய அனுபவங்கள் இல்லாத எவரொருவரும் கூட கதாபாத்திரங்களோடு ஒன்றி காட்சிகளில் லயித்திருக்கிறோம். அப்படியாய் நான் பார்த்து இன்னும் என் நாவுக்கடியில் கற்கண்டாய் தித்திக்கும், குழாய் வெந்நீராய் உள்ளுக்குள் சொட்டிக் கொண்டிருக்கும் காதல் காட்சிகளையும் வசனங்களையும் படிப்பவர்களின் பொறுமையை சோதிக்காதவாறு பகிர்ந்து கொள்வதில் காதல் கொள்கிறேன்..      



ஜானி படத்தில் ஸ்ரீதேவி தன்னுடைய நாணத்தை உடைத்துக் கொண்டு நேரடியாக  ரஜினியிடம் காதலைச் சொல்லும் காட்சி. குறிப்பாக அந்தகாட்சியின் கடைசியில் "அதுக்குள்ள அவசரப்பட்டு என்னென்னமோ பேசிட்டீங்க" என்று அவர் கேட்டதும் "நான் -ப்--டி-த்-தா- ன் பேசுவேன் என்று குழந்தையைப்போல ஸ்ரீதேவி சிணுங்க ஒருவரையொருவர் வெட்கம் பிடுங்க பார்த்து சிரித்துக் கொள்வது மொட்டவிழ்தலைப் போல மெதுவாக காதல் அரும்பும் அற்புத தருணம்  


"உன்மேல பைத்தியமா என்னால இருக்க முடியாது, உனக்கே தெரிஞ்சிடும்"

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சமந்தாவிடம் சிலம்பரசன் சொல்லும் டயலாக் இது. காதலென்பது ஒருமுறைதான் வரும் என்பதெல்லாம் சுத்தப் பொய். ஆனால் எத்தனை பேரை காதலித்தாலும் யாரோ ஒருவரின் மீது தான் நமக்கு சைக்கோசிஸ் இருக்கும்/இருந்திருக்கும். அந்த கிறுக்குத்தனம் பின்பு எவர்மீதும் வராது. அதை நாகரீகமாக சரியான  இடத்தில் இயக்குநர் கெளதம் மேனன் இன்செர்ட் செய்திருப்பார். கெளதம் ராக்ஸ்.


மௌனராகம் படத்தில் மோகன் ரேவதிக்கு ஒரு கிஃப்ட் வாங்கி அதைதிறக்கச் சொல்லுவார், "இதுல நானா ஆசைப்பட்டு வாங்கினது ஒன்னு இருக்கு, நீயா என்கிட்டே ஆசைபட்டு கேட்டது ஒன்னு இருக்கு, உனக்கு எது வேணும்னாலும் எனக்கு சம்மதம்தான் என்று அவர் சொல்ல கொலுசை ஏறெடுத்துக் கூட பார்க்கமால் விவாகரத்துப் பத்திரத்தில் ரேவதி கையெழுத்துப் போட அவர் முகத்தில் எந்த அசைவுமிருக்காது இதனுடைய follow-up காட்சி படத்தின் இறுதியில் வரும். ரேவதி மெட்ராசுக்கு செல்வதற்காக ஸ்டேஷனில் இருக்க மோகன் அங்கு வந்து இந்தா நீ என்கிட்டே ஆசைப்பட்டு கேட்ட விவாகரத்து வெச்சிக்க என்று பேப்பரை கையில் கொடுத்ததும் செய்வதறியாது திகைத்து ரேவதி கடையில் பரிதவித்து வசனம் பேசும் காட்சிகள் உருகி மருக்கக்கூடியவை..  
      

"கண்ட நாள் முதல்" படத்தின் க்ளைமேக்ஸ். 

ஒரு சின்ன ஈகோவினால் இருவரும் அடக்கி வைத்திருந்த காதல் பிரவாகமாய் ஊற்றெடுக்கும் அழகான காட்சி. அதுவும் கடைசியில் லைலாவிடம் பிரசன்னா கன்னத்தில் வாங்கும் ப்பளார் எல்லா ஈகோயிஸ்ட்டுகளும் வாங்க வேண்டிய அரை.



ராஜபார்வை படத்தில் ஒரு பாதகமான சூழலில் கமலஹாசனை விட்டு மாதவி பிரிந்திருக்க நேரிடும். ஆற்றாமையினால் புலம்பும் கமல் தன் நண்பன் ஒய்.ஜி மகேந்திரனிடம் "டேய் எனக்கு எதுவுமே தெரியலடா எல்லாம் இருட்டா இருக்குடா" என்பார். பல ஆண்டுகளாக கண் பார்வையே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வயலினிஸ்ட் ரகு முதன்முறையாக தான் ஒரு குருடன் என்று உணர்கின்ற காவிய சோகமான காட்சி அது.



சினிமாவில் தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயம், டென்ஷன், கிசுகிசு இதற்கிடையில் தன் காதலியை சுத்தமாய் மறந்தே போனவன் ஒரு படம் எடுத்து சாதித்ததும் அவள் வீட்டிற்கு ஓடிவந்து சொல்லும்போது "நீயும் என்னை அதிர்ஷ்டம் இல்லாதவனு நெனச்சிட்டல" என்று அவனை நிராகரிப்பாள். ப்ளீஸ் சௌமியா என்ன புரிஞ்சிக்கோ என்று எவ்வளவு கெஞ்சியும் கதவை சாத்திவிடுவாள். ரோட்டு வாசலுக்கு வந்தவன் அவள் வீட்டை திரும்பி பார்க்கும் போது பால்கனியில் நின்று இவனையே பார்ப்பாள். “என்ன சொல்ல போகிறாய்” என்கிற பாடல் நாதஸ்வர இசையோடு பின்னணியில் ஒலிக்க அஜீத் ஏக்கமாய் தபுவை நோக்கி பார்க்கும் காட்சியை இதற்கு மேல் எழுதில் சொல்வது என்னளவில் சிரமம்.



தன் மடியிலேயே காதலி அபிராமியின் உயிர் போனதை நம்ப முடியாமல் அவள் மூச்சு விடுகிறாளா என்று அவள் முகத்தை தன் காதோடு ஒத்தி ஒத்திப் பார்த்து பின்பு இறந்து விட்டாளென்று தெரிந்ததும் பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு "புண்ணியம் செய்தனமே மனமே....என்று அபிராமி அந்தாதியை பாடியபடி அபிராமியை காட்டுக்குள் தூக்கி நடந்து போகும் காட்சி. இன்னும் எத்தனை பெரிய திறமைசாலிகள் வந்தாலும் இதுபோன்றொரு காதல் காட்சியை எடுக்க முடியாதென்று திடமாக நம்புகிறேன்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..



"காதலிக்கிறப்போ உன் பின்னாடி சுத்தினது காதலில்லை, இப்போ உன்ன தொலைச்சிட்டு தெரு தெருவா தேடினேனே இதான்.. ப்ளீஸ் ஷக்தி  முழிச்சுக்க நீ இல்லாம என்னால வாழ முடியாது" என்று அவன் கெஞ்ச கெஞ்ச அவள் கண்ணிமைகள் மெல்ல திறக்க ஆரம்பிக்கும்.. அவனை அருகில் அழைத்து பயந்துட்டியா? என்று கேட்பாள்..”உயிரே போய்ச்சு” என்று அவளிடம் சொல்லி உடனே கேட்பான், “எனக்காக எதுவேண்ணா செய்வியா?

I Love You.

எனக்காக ட்ரைன்ல இருந்து குதிப்பியா?

I Love you.                                             

அப்டினா என்ன mean பண்ற?

தெரியல ஆனா I Love you.

அப்படியே திரை இருள I Love you. I Love you. I Love you. என்கிற வார்த்தை மட்டும் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

எதேதோ படத்திலிருந்து இன்னும் சொல்ல நினைக்கின்ற காட்சிகள் ஏராளமாய் இருக்கின்ற போதிலும் கடற்கரையிலிருந்து கிளம்ப மறுக்கும் குழந்தை போலவே இங்கிருந்து விடை பெறுகிறேன்..
      
ஆக்கம்: தமிழ்ப் பிரபா
Happy valentine’s Day




                                                 

No comments:

Post a Comment