தமிழுக்கு கலைஞர்
என்று பெயர்:
‘தமிழ்’ என்று ஒரு வெள்ளைத்தாளில் எழுதி அதை பீரோ
கண்ணாடியில் காட்டினால் “கலைஞர்” என்று தெரியும். தோராயமாக தமிழுக்கு என்ன வயது
இருக்குமென்று ஆதிச்சநல்லூர் கல்வெட்டிலிருந்து கூட இன்னும் கண்டுபிடிக்க
முடியாததால் கலைஞருடைய வயதுதான் தமிழுக்கும் இருக்கும். கலைஞர் வேறு தமிழ் வேறு
அல்ல, அவர் வாழும் வள்ளுவர்,
முத்தமிழ் அறிஞர் என்று
நம் உடன்பிறப்புகள் அவ்வப்போது தபேலா வாசிப்பார்கள். யார் சொன்னா தேவராஜே சொன்னான்
என்பது போல கலைஞரும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் தமிழுக்கு அவர் செய்த
தொண்டினை சொல்லி மல்குவார். குறிப்பாக இந்தி திணிப்புலிருந்து ஒட்டு மொத்த
தமிழ்நாட்டையே தன் மொழி உணர்வால் தீயிலிருந்து காப்பற்றியது போல புளகாங்கிதம்
அடைவார். நேற்று நடந்த இந்தி திணிப்பு சமாச்சாரத்தை முன்னிட்டு தன்னுடைய
அறிக்கையில் //எங்களுடைய மொழி போர்க் களங்கள் இன்னும் உலர்ந்து போய்விடவில்லை//
என்று டெல்லியை அச்சமூட்டினார். அவர் சொன்னதுக்கு ஏற்றார்போல தாள நயத்தோடு தோழர்
மனுஷ்யபுத்திரனும் //மொழிப்போரில் தி.மு.கவின் போராட்டமும் தியாகமும் எந்த
வரலாற்றுப் புரட்டினாலும் மறைக்க முடியாதது// என்று சுருதி சேர்த்தார். இவர்கள் சொல்வது வாஸ்தவம் ஆனால் தி.மு.க அன்று
கையில் எடுத்த இந்தி (திணிப்பு) எதிர்ப்பின் பின்னணியில் ஒரு அரசியல்
இருந்திருக்கிறது. போலவே தமிழ் மொழியையே திராவிட கட்சிகள்தான் குறிப்பாக தி.மு.க
தான் அனைத்து தளங்களிலும் எடுத்துச் சென்றது என்பது போல ஒரு பிம்பம் அவர்களுடைய
சாதுர்யத்தால் அரண்மனை சுவர்போல கட்டி எழுப்பபட்டிருக்கிறது. ஆனால் எனக்குத்
தெரிந்த சில தரவுகளைத் திரட்டி அதை உடைத்து சொல்ல விழைகிறேன். குறிப்பாக Work
From Home’ல் இருந்துகொண்டு இதை
இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் இதனுடைய வீரியத்தை நீங்கள் உணர்ந்து
கொள்ள வேண்டும். :)
கொஞ்சம் வரலாறு:
குப்தர்கள்,
கில்ஜி வம்சம், மொகலாயர்கள் என்று இந்தியாவை பலர் ஆண்டார்கள்
அவர்களில் யாரும் தங்களுடைய மொழியை இந்திய மக்கள் கட்டாயமாக பேச வேண்டும் நம் மீது
திணிக்கவில்லை. ஆனால் பின்பு வந்த வெள்ளைக்காரன் தன் 300 வருட ஆட்சியில் அவன்
மொழியை நம்முடையதாக மாற்றினான். குறிப்பாக ‘மெக்காலே’ என்கிறவன் நம்முடைய தாய்மொழிக் கல்வி முறையான
அடிமடியில் கைவைத்து அபாஷன் செய்தான். பிறகு அவர்கள் மூட்டை முடிச்சை
கட்டிக்கொண்டு போன பிறகு ஒவ்வொரு மாநிலத்தாரும் தங்களுடைய தாய் மொழியை மற்ற
தளங்களில் முக்கியமாக கல்வியில் கொண்டு வருவதற்கு படாத பாடு பட்டார்கள். நம்
மாநிலத்திலும் இதற்காக நிறைய தமிழ் அறிஞர்கள் போராடியதெல்லாம் வேறொரு
சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். அவர்களுடைய காலகட்டத்திற்கு பிறகு முதலமைச்சராக வந்த
காமராசர் நாடெங்கிலும் தமிழ் வழிப் பள்ளிகளைத் திறந்தார். வாய்ப்புள்ள இடங்களில்
கல்லூரிகளும் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டு கல்லூரிகளில் முதன்முறையாக அறிவியல்
பட்டப்படிப்பும், பட்ட
மேற்படிப்பும் தொடங்க முயற்சி எடுத்தார் அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம்.
மருத்துவம், தொழில்நுட்பம்,
சட்டம் என்று எல்லாக்
கல்விகளும் தமிழ் தர முயற்சிகள் தொடங்கப்பட்டன. பெ.நா அப்புஸ்வாமி, நா.வானமலை, தவத்திரு குன்றக்குடி அடிகளார் முதலியோர்
தமிழகமெங்கும் சுற்றித்திரிந்து கருத்தரங்கு நடத்தி தமிழால் இயலும் என்று
நம்பிக்கை ஊட்ட முயன்றிருக்கிறார்கள். டாக்டர். சி.எ பெருமாள், டாக்டர் அ.வா தேவசேனாபதி, பேராசிரியர் பி.செல்லப்பா எஸ். தோதாத்ரி,
வித்வான் ந.சுப்பிரமணியம்,
அ. நடராஜன், எஸ் மூர்த்தி முதலிய ஆசிரியப் பெருந்தகைகள்
தங்கள் வகுப்பறை அனுபவங்களை அடிப்படையாக் கொண்டு தமிழால் எல்லாம் முடியுமென்று
விளக்கிப் பேசினார்கள், கட்டுரை
எழுதினார்கள், நூல்கள்
வெளியிடப்பட்டன. தமிழ் எழுச்சி கைக்கு எட்டும்படியான சூழல் உருவாயிருக்கிறது.
இந்தி பிரவேசம்:
இந்த
சூழ்நிலையில் இந்தி திணிப்பு என்கிற பிரச்சனையை முதலில் கிண்டியிருக்கிறார் அன்றைய
உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா. மேலே குறிப்பிட்ட அரசியல்வாதிகளும் தமிழ்
ஆர்வலர்களும் நம் மொழிக்காக அடித்தளம் போட்டுக் கொண்டிருக்க, உருவாகியிருக்கும் இந்தி திணிப்பு பிரச்சனையை
ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒரு ஆயுதமாக 1965ல் தி.மு.க கப்பென்று பயன்படுத்திக்
கொண்டது. இப்போராட்டத்தின் சாராம்சம் இந்தி நெவர் (ஒருபோதும் வேண்டாம்) இங்க்லீஷ்
எவர் (எப்போதும் வேண்டும்) என்ற ஆங்கில முழக்கமே. நான்கு மொழிகள் கொண்ட திராவிட
நாட்டில் தமிழை மட்டும் ஆட்சி மொழியாக்க முடியாதென்பதால் ஆங்கிலத்தை
முன்னிலைப்படுத்தினர். ஆனால் “இந்தி நெவர்
இங்கிலீஷ் எவர்” என்ற முழக்கத்தை
ஊடறுக்கும் வகையில் ஒரு வலுவான கேள்வி எழுப்பப்பட்டது.
அன்றைய
கம்யூனிஸ்ட்டுகள்:
“அப்படியானால்
தமிழ்நாட்டின் தமிழின் இடமெங்கே? ஆட்சி
மொழியாகவும், நீதிமன்ற
மொழியாகவும், கோயில்
மொழியாகவும், எல்லாவற்றுக்கும்
அடிப்படையாக தொடக்க நிலையிலிருந்து இறுதிநிலை வரை கல்வி நிலையங்களில் பயிற்று
மொழியாகவும் ஆக வேண்டிய தமிழின் இடமெங்கே? என்று கேட்டது அன்றைய கம்யூனிஷ்ட் கட்சி. இந்த இடத்தில் இன்னொரு விஷயமும்
சொல்லியாக வேண்டும். தா.பா போன்ற சந்தர்ப்பவாதிகளால் ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட்
கட்சியே தமிழ்நாட்டில் இப்போது காமெடி பீஸாக இருக்கலாம் ஆனால் மொழிவழி
மாநிலத்திற்காக அன்று போராடியவர்கள், சட்ட மன்றத்திலும், பாராளுமன்றத்திலும்
முதன்முதலாக தமிழில் பேசியவவர்கள், நம்
மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கச் சொல்லி 63 நாட்கள்
பட்டினிப்போராட்டம் இருந்து கடைசிவரை எந்த கட்சியிலும் சேராமல் இறந்து போன
சங்கரலிங்கனார் தன் சடலத்தை கடைசியில் கொடுக்கச் சொன்னது, தமிழ்நாடு என்று பெயர் வைக்கச் சொல்லி
பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது இவ்வனைத்தும் அன்றைய கம்யூனிஸ்ட்டுகளே
என்று வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன! அன்றைய காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் தமிழ் நாட்டில் தமிழ்மொழி
வளர்வதற்கு பெரிய பங்காற்றின!!
தி.மு.க’னா சும்மாவா:
ஆனால், தன் பேச்சுத் திறமையால் தி.மு.க அனைத்தையும்
தன்வசப்படுத்தியது, அதற்கேற்றாற்போல்
1967ன் தேர்தல் முடிவுகள் வரலாற்றையே திசை திருப்பி விட்டன. முந்தைய அரசின் கல்வி
அமைச்சர் சி. சுப்ரமணியத்தின் தாய்மொழிவழிக் கல்வியை பெருக்கி ஓரம்
தள்ளியிருக்கிறார்கள். தமிழ் தமிழ் தமிழ் என்று வார்த்தைகளால் ஜல்லியடித்து
அம்மொழியை அறிவியல், அறவியல்
வளர்ச்சிக்கான திறவுகோல் என்ற நிலையிலிருந்து தி.மு.க தங்களுடைய அரசியல்
வளர்ச்சிக்கான வெற்று முழக்கமாய் மேடை தோறும் சதிராடியிருக்கிறது. தமிழ் மக்களிடயே
தமிழ் மொழி பற்றிய கிளர்ச்சியை அறிவுப்பூர்வமாக தூண்டாமல் உணர்வுப்பூர்வமாக
தூண்டும் வகையில் பேசி அவர்களை மந்தை ஆடுகளாக்கி இருக்கிறார்கள். போலவே அதை
வாய்ப்பாய் பயன்படுத்தி அப்போதிருந்த கல்வி வியாபாரிகள் அசட்டு தைரியத்துடன்
தமிழ்வழிக் கல்விக்கு போட்டியாக ஆங்கில வழிக் கல்வியை கொண்டுவந்தார்கள். மெட்ரிக்
பள்ளிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டது. தமிழ் மொழி ICUவில் அட்மிட் ஆனது அப்போதிருந்துதான். ஒருபுறம்
தங்களுடய ஆதாயத்திற்காக மொழியை பலி செய்தவர்கள் மறுபுறம் மேடை தோறும் “தமிழ் எங்கள் மூச்சு தமிழ் எங்கள் பேச்சு”
என்று ஜிகினா வார்த்தைகள்
பேசி மக்களை நம்ப வைத்து தன் பிடியிலிருந்து நழுவாமல் பத்திரமாக பார்த்துக்
கொண்டார்கள். தமிழறிஞர் கலைஞர் இதை மிக சாதுர்யமாக இன்றுவரை செய்துக்
கொண்டிருக்கிறார். இதெதுவும் தெரியாமல், தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல் அல்லது தெரிந்தும் வழுவமைதி காத்து தமிழ்
என்றால் கலைஞர். அம்மொழியை வளர்த்தது தி.மு.க என்றெல்லாம் கதை வசனம் பேசிக்
கொண்டிருப்பது அன்று நிஜமாகவே இம்மொழிக்காக பெரிதும் பாடுபட்டு உயிர்
நீர்த்தவர்களின் சமாதியை எட்டி உதைப்பதற்கு சமானம்.
ஆக்கம்
தமிழ்ப்பிரபா.
Really great!!!
ReplyDeleteநன்றி தோழர் :)
ReplyDelete